search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டு போட்டி"

    • வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
    • உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்த படியாக உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.

    தொட்டப்ப நாயக்கனூரில் உள்ள ஜக்கம்மாள் கோவில் திருவிழாவின் போது ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக கோவில் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டில் மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 681 காளைகளும், 480 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க பதிவு செய்திருந்தனர்.

    வாடிவாசல் முன்பு காளைகள் மற்றும் வீரர்கள் காயமடையாமல் இருப்பதற்காக தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தது. இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டி ருந்தது. இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின் போட்டி தொடங்கியது.

    வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். சில காளைகள் ஆக்ரோசமாக களத்தில் நின்று விளையாடின. வீரர்களும் அதற்கு நிகராக காளைகளுடன் மல்லுக்கட்டி அடக்க முயன்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பல சுற்றுகளாக மாலை வரை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், சிறந்த காளைகளுக்கும் டாடா ஏசி வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மின்விசிறி, அண்டா, பீரோ, தங்க காசு போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது.

    உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்து பார்க்கிறார்.
    • மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்து பார்க்கிறார்.

    இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டரிடம் நேரில் மனு அளித்தனர். அவர்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் முதல் முறையாக பார்ப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.

    • போட்டியில் மொத்தம் மொத்தம் 817 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
    • இறுதிச்சுற்று முடிவில் 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம்.

    உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்த போட்டியில் மொத்தம் 817 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன என்றும் 400 வீரர்கள் களம் கண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்று முடிவில் 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். இவருக்கு, தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாகப் வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து ரஞ்சித் 13 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தையும், 9 காளைகளை அடக்கி முரளி என்பவர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    • காளை ஓடிக்கொண்டிருக்கும் போது திடீர் என்று காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் 7 சற்று நடைப்பெற்று கொண்டிருக்கும் போது 556 காளைகள் அவிழ்த்த பின்பு ஒரு காளைக்கு காலில் அடிப்பட்ட காரணத்தால் 10 நிமிடம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஏனென்றால் ஜல்லிக்கட்டு களத்திலிருந்து அந்த காளையை மருத்துவ சிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்ற வேண்டும். அந்த நேரத்தில் வேறு காளைகளை அவிழ்த்து விட்டுவிட்டால், அந்த காளையை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு வசதியாக இருக்காது ஆகவே ஜல்லிக்கட்டு போட்டியானது 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த காளை ஓடிக்கொண்டிருக்கும் போது திடீர் என்று காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தயார் நிலையில் உள்ள கால்நடை மருத்துவக்குழு காளைக்கு உடனடியாக அருகில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்க உள்ளனர். தேவைப்பாட்டால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள கால்நாடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    • ஜல்லிக்கட்டை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
    • ஜல்லிக்கட்டில் 650 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம். தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத்திருவிழா, புத்தாண்டையொட்டி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு, நிகழாண்டில் நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை, மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த ஜல்லிக்கட்டுக்காக தச்சங்குறிச்சியில் வாடிவாசல், பார்வையாளர்கள் அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை பரிசோதிப்பதற்காக கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஜல்லிக்கட்டையொட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஜல்லிக்கட்டை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நேற்று திரண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள திடல், சி.சி.டி.வி கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறியபோது, "போதைப்பொருள் கொடுத்து கொண்டு வரப்படும் காளைகள் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படமாட்டாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே காளைகள் அவிழ்க்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு முடிந்ததாக அறிவிக்கப்பட்டதும், ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விடக்கூடாது என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காளைகளின் கொம்புகள் கூர்மையாக இருந்தால் அதன் மீது பிளாஸ்டிக் குப்பி அணிந்திருக்க வேண்டும். அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் முன்னேற்பாடு பணி நடைபெற்றுள்ளது. ஆகையால், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடைபெறும்" என்றனர்.

    • காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தொடங்கிய நிலையில் அந்த ஊர் தற்போது முதலே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் பாரம்பரிய உலகப் புகழ்பெற்ற வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், ஜல்லிக்கட்டு கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    அதன்படி முதற்கட்டமாக ஜல்லிக்கட்டு அழைப்பிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பாக உள்ள மந்தை திடலில் நடைபெற உள்ளது. இதையொட்டி அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் காளைகள் வந்து சேரும் இடம், காளைகள் நிறுத்தும் இடங்களில் டிராக்டர் மூலம் சுத்தப்படுத்தும் பணிகளும் மும்முரம் அடைந்துள்ளது.

    இதேபோன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி அங்குள்ள மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பாலமேடு பேரூராட்சி சார்பில் வாடிவாசல் முன்புறம், காளைகள் நிறுத்துமிடம் காளைகள் வந்து சேரும் இடங்களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று வாடிவாசல் வண்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியது. இதனையடுத்து தற்போது மைதானத்தை தூய்மைபடுத்தும் பணி, பார்வையாளர்கள் அமரும் கேலரி, காளைகள் வந்து சேரும் இடம், காளைகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை பாலமேடு கிராம பொது மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் கமிட்டி நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், இந்தாண்டு 2024 பாலமேடு ஜல்லிக்கட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகள்படி ஜனவரி 16-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு தமிழக முதல்வர் சார்பில் முதல் பரிசாக சொகுசு கார், இரண்டாவது பரிசாக பைக், வழங்கப்பட உள்ளது. இதே போன்று சிறந்த காளைக்கு முதல் பரிசாக பைக், இரண்டாவது பரிசாக கன்றுடன் கூடிய நாட்டு பசு, பரிசாக வழங்கப்பட உள்ளது.

    மேலும் விலை உயர்ந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், தங்கக்காசு, சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக கமிட்டியினர் தெரிவித்தனர்.

    ஜல்லிக்கட்டு பணிகள் தொடங்கிய நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

    கடலை மிட்டாய், புண்ணாக்கு ரொட்டி தீவனம், வைக்கோல் உள்ளிட்ட உணவு பொருட்களை ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உணவாக கொடுத்து தங்களது காளைகளை ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க தயார்படுத்தி வருகின்றனர். மேலும் மாடுபிடி வீரர்கள் தங்களது குல தெய்வங்களுக்கு காப்பு கட்டி, விரதம் இருந்து காளைகளை வடத்தில் கட்டி பயிற்சி கொடுத்து வருகிறார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தொடங்கிய நிலையில் அந்த ஊர் தற்போது முதலே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் புதுமையை படைத்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது காளைகளினால் உயிர்ச்சேதம், காயங்களை தவிர்த்திடும் வகையில், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் பரிந்துரையின்பேரில் காளைகளின் கொம்புகளில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பரால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் பொருத்தவும் ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வருகிறது.

    ஆனாலும் காளைக்கும், காளையர்களுக்கும் இடையே நடக்கும் இந்த வீர விளையாட்டில் சொகுசு கார், பைக்கை குறித்து களம் இறங்க இருதரப்பிலும் தயாராகி வருகிறார்கள்.

    • இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் நாளான வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்தில் தொடங்குகிறது.
    • போட்டியில் பங்கேற்கும் காளையின் வயது 3 முதல் 8-க்குள் உள்ளதா? என்று பரிசோதித்தனர்.

    திருப்பரங்குன்றம்:

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா மதுரைக்கு தனி அடையாளத்தை தருகிறது.

    பொங்கல் பண்டிகை அன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்தநாள் பாலமேடு, அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூர் ஆகிய இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

    இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் நாளான வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்தில் தொடங்குகிறது.

    ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ்கள் வழங்குவது வழக்கம்.

    அதன்படி காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. காளைகளின் கொம்புகள் உயரம், பற்களின் எண்ணிக்கை, திமில் அளவு குறித்து அளவீடு செய்து கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

    மேலும் போட்டியில் பங்கேற்கும் காளையின் வயது 3 முதல் 8-க்குள் உள்ளதா? என்றும் பரிசோதித்தனர். தகுதியுடைய காளைகளுக்கு படத்துடன் கூடிய தகுதி சான்றிதழ்களை மருத்துவ குழுவினா் வழங்கினா்.

    • போட்டி தொடங்குவதற்கு முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

    மதுரை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் எம்.சத்திரப்பட்டியில் இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதற்காக அங்குள்ள திடலில் வாடிவாசல் ஏற்படுத்தப்பட்டு 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் பிரமாண்ட கேலரிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

    இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமைச்சர்கள் மூர்த்தி, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன், ராஜ கண்ணப்பன், சிவசங்கரன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங், எம்.எல்.ஏ.க் கள் தளபதி, சோழவந்தான் வெங்கடேசன், புதூர் பூமிநாதன் மற்றும் கூடுதல் கலெக்டர் சரவணன், தி.மு.க. நிர்வாகி கள் சோமசுந்தர பாண்டியன், ஜி.பி.ராஜா, மருது பாண்டி, வக்கீல் கலாநிதி, வீரராகவன், வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியவுடன் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி யது. வீரர்களும் அதற்கு இணையாக காளைகளை அடக்கினர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதேபோல் 776 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதி சுற்றுவரை பங்கேற்று வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கும், காளை உரிமையாளருக்கும் முதல் பரிசாக கார்கள் வழங்கப்படுகிறது. இதேபோல் இருபிரிவிலும் 2-ம் பரிசாக 2 புல்லட் பைக்குகளும், 3-ம் பரிசாக 2 ஹீரோ பைக்குகளும் வழங்கப்படுகிறது.

    அதேபோல போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் ஒரு கிராம் தங்க காசு வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்க பரிசும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, சைக்கிள் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். போட்டியில் காயம் அடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுவும், ஆம்புலன்சு வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கரடிக்கல்லில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது.
    • வள்ளித்திருமணம் நாடகம் ஜல்லிக்கட்டு மைதானம் அருகில் நடைபெற உள்ளது என்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கரடிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜபெருமாள் கோவில் திருக் கல்யாண நிகழ்ச்சியை யொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை (23-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக கரடிக்கல் கிராமத்தில் திருமங்கலம்-செக்கானூரணி ரோட்டில் கள்ளர் பள்ளிக்கு எதிரே உள்ள பிரமாண்ட மைதானம் தயாராகி வருகிறது. காலரி, வாடிவாசல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டிக்கான காளைகள் முன்பதிவு மற்றும் மாடுபிடி வீரர்க ளுக்கான முன்பதிவு நேற்று மதியம் ஆன்லைனில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தமுறை 600 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள் ளது. இந்த போட்டிகளில் கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த உள்ளூர் மாடுபிடி வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும், அனைவரும் பார்வையாளர்களாகவே இருப்பார் கள் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

    போட்டிகளை அமைச்சர் மூர்த்தி, தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மணிமாறன், மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். இது குறித்து ஜல்லிகட்டு போட்டிகளை நடத்தும் விழா கமிட்டியினர் கூறுகையில், போட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும். ஒவ்வொரு பிரிவிலும் 50 மாடு பிடிவீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சீரூடைகள் வழங்கப்படும்.

    வெற்றி பெறும் வீரர்களுக்கு பீரோ, கட்டில், தங்ககாசு, குத்துவிளக்கு, பேன், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப் படும். காயமடைந்த வர்க ளுக்கு உாிய சிகிச்சை யளிக்க மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கால்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒத்துழைப் புடன் ஜல்லிக்கட்டு போட்டி கள் நடைபெற உள்ளது. போட்டிக்கு முந்தைய நாளான இன்று இரவு வள்ளித்திருமணம் நாடகம் ஜல்லிக்கட்டு மைதானம் அருகில் நடைபெற உள்ளது என்றனர்.

    • சிலர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் வரும் 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கேலரிகள் அமைக்கும் பணிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வரு–கிறது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாடுகளை பிடிப்பதற்கான தனி இடமும் அதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடி வீரர்கள் முன்பதிவு பணி தொடங்கியது. இதனை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலுசாமி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி, பொருளாளர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற முன்பதிவில் மொத்தம் 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

    இதனிடையே திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி அளித்த மனுவில், 'அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என்று ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடுக்கப்பட்டு நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவையும் இணைத்துள்ளேன். அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

    • கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • கேலரிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம்அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டு களாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் அலகுமலை பகுதியில் போட்டி நடத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரும் 23-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.அதனைத் தொடர்ந்து தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு கேலரிகள் அமைக்கும் பணிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    மேலும் போட்டி யில் கலந்து கொண்ட மாடுகளை பிடிப்பதற்கான தனி இடமும் அதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை போட்டியில்கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடிவீரர்கள் முன்பதிவு பணி தொடங்க உள்ளதாக ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

    • பிப்ரவரி 19 -ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது.
    • அலகுமலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இடத்தை ஆய்வு செய்தனர்.

    திருப்பூர் :

    அலகுமலையில் ஜல்லிக்க ட்டு போட்டி வருகிற 23-ந் தேதி நடைபெறுவதாகவும், நாளை மறுநாள் முதல் முன்புதிவு தொடங்குவ தாகவும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. அதற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலை காளைகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. அலகுமலை ஜல்லிக்கட்டில் வழக்கமாக 600க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள். பரிசுகளும் ஏராளமாக வழங்கப்படும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் அலகுமலை மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஜனவரி 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஜல்லிக்கட்டு வாடிவாசல், கேலரி அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடம் குறித்து அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பிப்ரவரி 19 -ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது.

    ஆனாலும் ஜல்லிக்கட்டு நடத்தும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிந்து வந்ததால், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டு, போட்டியை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 23-ந் தேதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகள் பாதுகாப்பு சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போட்டியை அலகுமலையில் நடத்தக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. இதனால் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் அலகுமலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இடத்தை ஆய்வு செய்தனர்.

    இதனால் ஆலோசனை க்கு பின்னர் இடம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி அலகுமலையில் வருகிற 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். மாடுபிடி வீரர்களின் முன்பதிவு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அலகுமலை ஜல்லிக்கட்டு திடலில் தொடங்குகிறது. எனவே மாடுபிடி வீரர்கள் தங்களுடைய ஆதார் கார்டு நகலுடன் வந்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×